செந்தமிழ்சிற்பிகள்

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (1901-1980)

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (1901-1980)

 அறிமுகம்

தென்பட்டினம் பொன்னுசாமியின் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சி-சுந்தரனார், தமிழக மக்களால் 'தெ.பொ.மீ.' என்று மதிப்போடு அழைக்கப் பெற்றவர். ஏறக்குறைய எண்பது ஆண்டுக் காலம் (8.1.1901 - 27.8.1980) தமிழ் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர்: 'பன்மொழிப் புலவர்', 'பல்கலைச் செல்வர்', 'நடமாடும் பல்கலைக்கழகம்', 'பெருந்தமிழ்மணி', 'குருதேவர்', 'பத்மபூஷண்', 'கலைமாமணி' முதலான பல்வேறு சிறப்புப் பெயர்களாலும் பட்டங்களாலும் சிறப்பிக்கப்பட்டவர். சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மென், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செயலர், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர், திராவிட மொழியியல் கழகத்தின் முதுநிலை ஆய்வாளர், ஆழ்நிலைத் தியானத்தின் தேசியக் குழு உறுப்பினர் -எனப் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்து தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர். சட்டம், வரலாறு, உளவியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம், மொழியியல், ஆன்மிகம் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் பழுத்த புலமை பெற்றிருந்தவர். அவருக்கு அன்பும் அறிவும் குழைத்து ஊட்டி வளர்த்த அவரது தமையனார் சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலரைத் தமிழ் கூறு நல்லுகம் நன்கறியும்.

இவரைப் போல இன்னொரு மகன் எனக்கு கிடைப்பானா எனத் தமிழே ஏங்குமளவிற்கு அழ்ந்த அறிவும் புலமையும் பெற்றுத் தன் பணிகளால் தமிழுக்கு பெருமையும் புகழையும் ஈட்டித்தந்தவர்.பன்மொழி புலவர், பல்கலைவித்தகர், சங்க இலக்கிய வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். தன் முப்பத்தி ஆறாம் வயதிலேயே பன்மொழிப் புலவர் எனும் பட்டம் ஈன்ற பெருமகனார்.